திருமாவளவனுடன் மோதல்: காயத்ரி ரகுராமின் ட்விட்டர் கணக்கு முடக்கம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குறித்து தொடர்ந்து அவதூறான கருத்துக்களைத் தெரிவித்துவந்த நடிகையும் நடனக் கலைஞருமான காயத்ரி ரகுராமின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளன் கூட்டம் ஒன்றில் இந்துக் கோவில்கள் குறித்தும் அங்குள்ள சிற்பங்கள் குறித்தும் மோசமாகப் பேசியதாக இரு நாட்களுக்கு முன்பாக பா.ஜ.கவின் தமிழகப் பிரிவு வெளியிட்டிருந்த வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்த காயத்ரி ரகுராம்,திருமாவளவனை அதில் கடுமையாக விமர்சித்திருந்தார்.


பிறகு தொடர்ந்து திருமாவளவன் ஊடங்களில் பேசியதைப் பகிர்ந்துவந்த அவர், பிறகு அவர் தன்னுடைய எண்ணை எல்லோருக்கும் பகிர்ந்து தனக்கு போன் செய்யச் சொல்லியிருப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.


இதற்குப் பிறகு, தவறான வார்த்தைகளில் தொடர்ந்து திருமாவளவனை அவர் திட்டியிருந்த நிலையில், திங்கட்கிழமை காலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த பெண்கள் அவரது வீட்டை முற்றுகை இட்டனர்.


இந்த நிலையில், காயத்ரி ரகுராம் ட்விட்டர் விதிமுறைகளை மீறியிருப்பதால் அவரது கணக்கு முடக்கப்பட்டிருக்கிறது. ட்விட்டரில் காயத்ரி ரகுராமை மூன்றரை லட்சம் பேர் பின்தொடர்ந்து வந்தனர்.