சிதம்பரம் கோயிலில் பெண்ணைத் தாக்கிய தீட்சிதர் இடைநீக்கம்

கடந்த சனிக்கிழமையன்று சிதம்பரம் நடராஜர் கோயிலில் சரியாக அர்ச்சனை செய்யும்படி கூறிய பெண் ஒருவரைத் தாக்கிய தீட்சிதர் இரண்டு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக கோயிலைச் சேர்ந்த தீட்சிதர்கள் தெரிவிக்கின்றனர்.


சிதம்பரம் நகரின் வ.உ.சி தெருவைச் சேர்ந்தவர் லதா என்பவர் கடந்த சனிக்கிழமையன்று தன்னுடைய மகன் ராஜேஷின் பிறந்த நாளை ஒட்டி, சிதம்பரம் நடராஜர் கோயிலில் அர்ச்சனை செய்யச் சென்றார். அந்தக் கோயில் வளாகத்தில் உள்ள முக்குறுணி விநாயகர் சந்நிதிக்குச் சென்ற அவர், அங்கிருந்த தீட்சிதர் தர்ஷன் என்பவரிடம் அர்ச்சனைக்கான பொருட்களைக் கொடுத்திருக்கிறார்.


லதா, தன் மகனுடைய பெயர், நட்சத்திரம் ஆகிய விவரங்களைத் தெரிவிப்பதற்குள் அர்ச்சனையை முடித்துவிட்டதாக, பொருட்களைத் திரும்பத் தந்திருக்கிறார் தர்ஷன்.


இதனால், எந்த விவரத்தையும் கேட்காமல், மந்திரங்களை ஒழுங்காகச் சொல்லாமல் இப்படி அர்ச்சனை செய்து தருகிறீர்களே என்று அவர் கேட்டபோது எழுந்த வாக்குவாதத்தின் முடிவில், தர்ஷன் தகாத வார்த்தைகளால் அந்தப் பெண்ணைத் திட்டி கன்னத்தில் அறைந்து, பிடித்துத் தள்ளிவிட்டதாகச் சொல்லப்பட்டது.